இந்திய மீனவர்கள் கடற்படை வீரரை கடத்த முயற்சித்தமையே அனர்த்தங்களுக்கு வழிவகுத்ததாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்
கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை இறைமையுள்ள நாடு என்றவகையில் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன எனவும், இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
எமது கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு எனவும் கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை கைப்பற்ற முனையும் போதே சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இந்திய மீனவர்கள் இலங்கை கடல்எல்லையைத் தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களைத் தவிக்குமெனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார் .