எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி தொழில் வாய்ப்பிற்கு பொருத்தமானவர்களை மட்டும் இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வாரத்திற்கு ஒரு தடவை கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .
இஸ்ரேல் விவசாயத் துறையின் வேலை வாய்ப்பிற்காக செல்லும் நபர்களுக்காக பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அரசாங்கத்தின் விவசாயத் துறையிலான தொழில் வாய்ப்புக்கள் பாரிய அளவில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள போதும், அதற்கு பொருத்தமற்ற நபர்கள் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் அனுப்பப்பட்டதன் விளைவாக நோக்கம் பாதிப்படைந்துள்ளதாகவும் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் 5000 பேரளவில் விவசாயத்துறை தொழில் வாய்ப்புக்காக எதிர்பார்த்துள்ளதாகவும், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதாயின் ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களை விட்டு செல்லாதிருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாதவர்களாக இருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்