தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பதுடன் பொதுசன வாக்கெடுப்பில் தோற்கடிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (28/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சில தேவையற்றவர்களை மக்கள் நிராகரித்துள்ள நிலையில் பெரும்பான்மை வாக்குகளை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு வழங்கியுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தாங்கள் நினைத்தை செய்யும் அதிகாரம் அவர்களிடம் இருக்கின்ற நிலையில் சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்வதற்கும் சர்வதேசத்திடமும் நற் பெயரை பெறுவதற்காகவும் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.