க்ளின் சிறிலங்கா திட்டம் என்பது சுற்றுச் சூழலை சுத்தம் செய்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தல் அல்லது கொள்கைகளை செயற்படுத்துவது மட்டுமல்லாது, நடத்தை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் நற் பண்புகளை ஏற்படுத்துவதற்காகவும் செயலாற்ற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாராயன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான இட ஒதுக்கீடு, பிரதேச சபைகளின் எதிர்கால அபிவிருத்தி திட்டம், சமூக வலுவூட்டல் திட்டங்கள் மற்றும் க்ளின் சிறிலங்கா திட்டத்தை செயற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
மகரகம மற்றும் கெஸ்பேவ எல்லைகளில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளிற்கு தீர்வு காணல், கொழும்பு பிரதான பஸ்தரிப்பிடத்தில் உள்ள அசுத்தமான தன்மையை உடனடியாக நீக்குதல் மற்றும் சீத்தாவக்கை நிரிபொல வயல் நிலங்களில் பாதுகாப்பற்ற முறையில் குப்பைகளை கொட்டுவதனை நிறுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.