தமது கட்சி மீது அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் பொய்யான சேறுபூசல்களும் அவதூறு பிரசாரங்களும் தம்மை ஒருபோதும் அசைத்துவிடாதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சேறுபூசல்கள் தமக்கு புதிதல்ல எனவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை யாழ்.ஸ்ரான்லி வீதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைதான இளைஞனும் அவரது சகோதரனும் சில வருடங்களுக்கு முன்னர் பெற்றோரை இழந்தவர்கள் எனும் ரீதியில் தமது அவலத்தை வெளிப்படுத்தி உதவி கேட்டபோது, அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் குறித்த நபர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனத் தெரியவந்ததும் அவர்களுக்கு நல்வழிகாட்டி,அவர்களை அதிலிருந்து மீட்டு புனர்வாழ்வு பொறிமுறைக்குள் இணைக்கப்பட்ட போதிலும்,தற்போது அவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் தமது கட்சி மீது பொய்யான அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் இவற்றில் எவ்விதமான உண்மையும் இல்லையெனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார் .