ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் வருகைக்கு எதிராக சில குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிசாரால் நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஐந்து பேர் நாளைய தினம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சில குழுக்கள் தயாராகியுள்ளதாக தெரிவித்து பொலிசாரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளைய தினம் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அதற்கமைய,
யாழ் மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் சர்வானந்தசிவம் சசிகரன்,
ஆர்ப்பாட்ட குழுவின் யாழ் மாவட்டத் தலைவர் பொன்ராஜா பிறேம் டக்ளஸ் பிரபாகரன் ,
சாவகச்சேரியை சேர்ந்த எஸ்.ஜெஸ்மின்,
சுழிபுரம் பகுதியை சேர்ந்த முருகையா கோமகள்
ஆகியோருக்கே நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது
