வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ஊழியர்களுக்க ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (28) 2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் கூடிய போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கக் கூடிய வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுப்படுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இக்கலந்துரையாடலில், கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வசதிகளை வழங்குவதை விரிவுப்படுத்தல், கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மையமாகக் கொண்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது




