இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான அனில் ஜயந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பது தொடர்பான விசேட கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை இதன்போது சுட்டிக்காட்டிய சபாநாயகர் , அமெரிக்கா இலங்கைக்கான முக்கிய நட்புறவு நாடுகளில் ஒன்றாகும் என்றார்.
ஜனநாயக நாடுகள் என்ற ரீதியில் இருதரப்பு உறவுகளும் பரஸ்பர நன்மைகள் மற்றும் ஜனநாயக ஆட்சியின் விழுமியங்களைப் பலப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

