தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்பிற்கான அடையாளங்களை பாதுகாப்பதாகவே இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் சிறீகாந் பன்னீர்ச்செல்லவம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்தவராக அதற்கான தீர்வு விடயத்தை கையாள வேண்டுமே தவிர வெறும் அரசியல் தேவைகளுக்காக தமிழ் மக்களை பயன்படுத்த கூடாதெனவும் ஊடகச் செயலாளர் சிறீகாந் பன்னீர்ச்செல்லவம் வலியுறுத்தினார்.
அண்மையில் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க வடமராட்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, கடந்தகால அரசுகளை மோசடிகாரர் என்ற போர்வையில் குற்றம் சாட்டியதுடன், தான் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியை மக்களிடம் கேட்டு மக்களின் உணர்வுகளுக்கேற்ப பொது தேவைக்கு அதை கையளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் குறித்த விடயம் தமிழ் மக்களின் முதன்மையான அபிலாசையாகவோ தேவையாகவோ இருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் சிறீகாந் பன்னீர்ச்செல்வம் சுட்டிக்காட்டினார்.
மாறாக அந்த மேடையில் தையிட்டி விகாரை வேண்டுமா? வேண்டாமா?, அல்லது பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, காணி நிலங்களை விடுவிப்பது, அரசியல் உரிமை, மாகாணசபை தேர்தல் போன்றவற்றுக்கு தீர்வுகள் வேண்டுமா? வேண்டாமா? உள்ளிட்ட கேள்விகளை மக்களிடம் முன்வைத்து மக்களின் உணர்வுகளை தெரிந்து கொண்டிருக வேண்டும் எனவும் ஊடக செயலாளர் சிறீகாந் பன்னீர்ச்செல்லவம் தெரிவித்தார்.
இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என வலியுறுத்திய ஊடக செயலாளர் சிறீகாந் பன்னீர்ச்செல்லவம் தனது ஆட்சியில் உள்ள குறைபாடுகளை மறைக்க யாழ்ப்பாணம் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வடக்கின் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் இயலாதவர்கள் என்ற போர்வையில் ஜனாதிபதி சித்தரிக்க முற்பட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.
Link : https://namathulk.com