யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடு இடம்பெற்றது.
இதன்போது வர்த்தகர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் பொலிஸாரால் தெளிவூட்டப்பட்டதுடன்,வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவுள்ள வடிகான்களை துப்பரவாக வைத்திருப்பது வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த செயற்பாட்டில் எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் பொருட்களை ஏற்றி இறக்கும் நேரத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.