யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுபாலியல் வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்யப்பட வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் முன்னிலையில் குறித்த மேன்முறையீட்டு மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான பரிசீலனையை ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடாத்த நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம்,கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி, பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமார் உள்ளிட்ட 07 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்பளித்தது.
இந்த தீர்ப்பை ஆட்சேபனைக்கு உற்படுத்தி குற்றவாளிகளால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி , பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com