பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறும் நடைபெறும் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் முதலாவது மாநாட்டில் கலந்துக்கொள்ளும் இலங்கை குழுவினர் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர்.
சபாநாயகர் கலாநிதி . டபிள்யூ. எம்.ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான ஆறு பேர் அடங்கிய தூதுக் குழு நேற்றைய தினம் லாகூர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முகமது முலாஃபர் முகமது முனீர் , பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ துஷாரி ஜெயசிங்க, இளங்குமரன் கருணாநாதன், ஜனத் சித்ரல் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரா ஆகியோர் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சபையால் நேற்று முதல் எதிர்வரும் 10 வரை பாகிஸ்தானின் லாகூரில் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் பாராளுமன்ற சங்கத்தின் அனுசரணையில் இரு பிராந்தியங்களின் உறுப்பு நாடுகளிடையே அர்த்தமுள்ள உரையாடல், ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு தனித்துவமான நிகழ்வாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான பாராளுமன்ற உத்திகள்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடாத்தப்படுகிறது.
சமகால பிராந்திய சவால்கள் குறித்து விவாதிக்கவும், ஜனநாயக ஆட்சி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த மாநாடு அமைந்துள்ளது.
Link : https://namathulk.com