இனவாத நடவடிக்கைகளில் இராணுவம் தொடர்ந்து ஈடுபடுகின்றமைக்கு வலி வடக்கில் அமைந்துள்ள சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரை சிறந்த உதாரணமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போர் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் தமிழர் பிரதேசங்களில் இராணுவம் தொடர்ந்து இனவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை குறித்து அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமையவே அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுகின்றதா என்பது தொடர்பில் தெரியவரும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரையின் கட்டுமானத்தை அனுமதிக்க முடியாதென எதிர்ப்பு வெளியிட்ட போதிலும் விகாரையின் கட்டுமாணத்தை இராணுவம் முழுவீச்சில் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் தனியாருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் காணியில் விகாரை கட்டப்பட்டது என்றும் இதற்கு அரசாங்கம் பதில் கூற வேண்டுமெனவும் , நேற்றைய சபை அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
Link : https://namathulk.com