பெரும்போக நெற்செய்கையின் அறுவடை முடிவுக்கு வரும் நிலையில் விவசாயிகளை சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சிறுதானிய பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, விளைபொருட்களுக்குரிய சந்தை வாய்ப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியதோடு, இந்த நடவடிக்கைகளை மத்திய, மாகாணம் என்று பாராமல் எமது மக்கள் – விவசாயிகள் என்ற எண்ணத்துடன் அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்.
அத்துடன், கடந்த காலங்களில் இவ்வாறான சிறுதானியப் பயிர்ச்செய்கைக்காக ஏற்று நீர்பாசனங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அதை மீளவும் முழு வீச்சில் ஆரம்பிக்கவேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.
சிறுதானியப் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதில் தரவுகளைப் பெற்றுக் கொள்வது சவாலாக இருப்பதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தரவுகள் துல்லியமாக இருந்தால் மாத்திரமே, சிறுதானியப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படும் காலங்களில், இறக்குமதி செய்யப்படும் சிறுதானியங்களுக்கான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் வாய்ப்பு உள்ளது என்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் வலியுறுத்தினார்.