நாட்டில் தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உப்பு இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் கூடி, துறைசார் அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இவர்கள் கலந்துரையாடிய முக்கியமான விடயங்கள் என்ன ?
- தமிழ் , சிங்கள புதுவருடத்திற்கு உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்தல்.
02.உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
03.நெல் கொள்வனவும், ஆளையாலர்களுக்கான கடன் வசதிகள்.
04.கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுப்படுத்துதல்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும், தகவல்களும் மிக முக்கியமானவை என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், அந்த பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், நெல் கொள்வனவு குறித்தும் இங்கு ஆராயப்பட்டதோடு, நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சலுகை விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், நாட்டு மக்களின் உணவு நுகர்வு தொடர்பில் ஆய்வு செய்து, ஆரோக்கியமான மக்களை உருவாக்கவும், உணவு விரயத்தை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பை நிறுவுதல், அத்தியாவசிய உணவு தகவல் கட்டமைப்பை பராமரித்தல், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுக்கோள்களின் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்குதல், விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து விநியோகிப்பதற்கான திட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
Link : https://namathulk.com