வவுனியாவில் போதைக்கு அடிமையான இளைஞர் குழுவினர் தொடர்சியாக பல்வேறு முரண்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களை தாக்குவதும், வர்த்தக நிலையத்தில் முரண்படுவதும் என பல சம்பவங்கள் கடத்த சில நாட்களாக பதிவாகின்றன.
இவ்வாறானதொரு சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் பாடசாலை மாணவன் மீது நேற்று மாலை இளைஞர் குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த இளைஞர்கள் போதைபொருட்களை பாவிப்பவர்கள் எனவும், நேற்று மது போதையில் பாடசாலை மாணவன் மீது கண்ணாடி துண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த மாணவன் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை.
இதற்கான காரணம் தொடர்பில் காயமடைந்த மாணவனின் தந்தையிடம் “நமது TV” செய்திப் பிரிவினர் பேசிய போது…
“வைரவப்புளியங்குளம் பகுதியில் தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மகன் தனியாக வரும் போது திரும்பவும் தாக்குதல் மேற்கொள்வார்கள் என பயம் உள்ளது. அந்த குழுவினர் போதைபொருள் பாவிப்பவர்கள். பாடசாலை மாணவர்களிடம் பணம் பறிப்பதற்காக இதனை செய்கிறார்கள். ” என கூறினார்.
போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், வவுனியா பொலிசார் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அசமந்தமாக காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் வவுனியா பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் “நமது TV” செய்திப் பிரிவினர் வினவினர்.
இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா பொலிஸ் பிரிவில் இடம்பெறும் இவ்வாறன சம்பவங்கள் தொடர்பில் சம்பத்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த பின்புலத்தில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கடந்த நான்காம் திகதி மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு , இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com