தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதியமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் மேற்கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்கள் குறித்து பிரதி அமைச்சர் பிரதமருக்கு விளக்கினார்.
ஆட்கடத்தலுக்கு எதிரான வேலைத்திட்டம் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதுடன், மியன்மாரில் ஆட்கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும், தற்போது ஆபத்தில் சிக்கியுள்ள எஞ்சிய 18 இலங்கையர்களை விடுவிக்க தொடர்ந்தும் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.
தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நெருக்கமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இரு நாடுகளின் வர்த்தக சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பிரதி அமைச்சர் தொங்லெக் பாராட்டினார்.
இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைடன் மகாபன்ன போர்ன் மற்றும் தாய்லாந்து தூதுக்குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவின் பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன, அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் திலினி இகலகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
Link : https://namathulk.com