அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர், அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலை யாழப்பாணம் மூளாய் பகுதியிலுள்ள அன்னாரது பூர்வீக இல்லத்தில் நேற்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, அமரர் அமிர்தலிங்கம் நேர்மையானவராக இருந்தமையினாலே மக்களால் இன்றுவரை மதிக்கப்படுகின்றார் என ஆளுநர் வலியுறுத்தினார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி அமிர்தலிங்கம் மற்றும் தந்தை செல்வா ஆகிய இருவரும் தம்மை சந்திக்கும் மக்களின் குறைகளைக்கேட்டு குறித்துக்கொண்டு கொழும்புக்குச் சென்று அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து அதனை கடிதம் மூலம் மக்களுக்கு அறிவிக்கும் பழக்கம் கொண்டவர்கள் எனவும் வடக்கு ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி 1983ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து டெல்லிக்கு, அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியிருந்ததாக தெரிவித்த ஆளுநர், மிகப்பெரிய இராஜதந்திரி என்று அமிர்தலிங்கத்தை இந்திராகாந்தி கூறியதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, அமிர்தலிங்கத்தை போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை எனவும் வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் கூறினார்.
Link : https://namathulk.com