இலங்கை மாணவர்களுக்கான துருக்கி புலமைபரிசில் கோட்டாவை அதிகரிக்க தீர்மானம்

Aarani Editor
1 Min Read
துருக்கி புலமைபரிசில்

இலங்கை மாணவர்கள் துருக்கியில் கல்வி கற்க, தற்போது வழங்கப்படும் 15 புலமைப்பரிசில் கோட்டாக்களை, 25ஆக அதிகரிக்கப்படும் என துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut)தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என துருக்கி தூதுவர் உறுதியளித்தார்.

அத்துடன், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘க்ளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்திற்கு துருக்கி குடியரசின் பாராட்டுகளை தெரிவித்த தூதுவர், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய மக்களின் வறுமையை மட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

மேலும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுக்காக தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு துருக்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும், எதிர்காலத்தில் அதற்கான பல ஒப்பந்தங்களை கைசாத்திட எதிபார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் துருக்கிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் தூதுவர் அழைப்பு விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், துருக்கி தூதரக தூதுக்குழுவின் பிரதி பிரதானி மர்வே கோட்ஸே ஒட்லு உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *