இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று, யாழ். இந்து கல்லூரியில் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்ட பிரதமர், பாடசாலையின் இந்து கலாசார வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
இதன்போது பாடசாலையின் சாதனைகள் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பிரதான பாடசாலைகளில் ஒன்றாகும் என தெரிவித்த பிரதமர், இந்த பாடசாலை அடைந்துள்ள சாதனைகள் பற்றி வழங்கப்பட்ட அறிக்கை மிகவும் சிறப்பானது எனவும் கூறினார்.
அத்துடன், பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற விதம் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலதிக பிரத்தியேக வகுப்புகள் குறைக்கப்பட வேண்டுமானால், குழந்தைகளுக்கு பாடசாலை மூலம் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், சிறந்த கல்வியின் மூலம் சமூகத்திற்கு நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த தலைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, யாழ்.இந்துக்கல்லூரியின் அதிபர் மற்றும் பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Link : https://namathulk.com