கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் மூலம் பிள்ளைகள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை உருவாக்குவதே நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையில் நேற்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
தொழிற்கல்வி என்பது இடைவிலகும் பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஏதேனும் ஒரு மருந்தல்ல. அது, கல்வியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், பாடசாலை கல்வி முறையிலேயே தொழிற்கல்வி பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சமூகத்தில் அனைவருமே பொறியியலாளராகவோ அல்லது வைத்தியராகவோ இருக்க முடியாது, அத்தகைய சமூகம் சமநிலையான சமூகம் அல்ல எனவும் பிரதமர் கூறினார்.
இதன்படி, சமூகத்தின் இருப்பிற்கு பல தொழில்கள், திறன்கள் அவசியம் என வலியுறுத்திய பிரதமர், அவ்வாறனதொரு கல்வி திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வைத்தியராவதைத் தேர்ந்தெடுப்பதும், விவசாயம், தச்சு போன்ற தொழில்களை தேர்ந்தெடுப்பதும் சம பெறுமானமுள்ள தேர்வாக இருக்க வேண்டும் எனவும் அவ்வாறனதொரு மாற்றம் கல்வி துறையிலும், சமூகத்திலும் ஏற்படுத்தப்பட வேணடும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், பொலன்னறுவை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, தற்போதுள்ள அத்தியாவசிய பாடசாலை உபகரண தட்டுப்பாடு, பாடசாலை கட்டிடங்கள் தொடர்பான பிரச்சினைகள், தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளால் பிள்ளைகள் வருகையின்மை, வன விலங்குகளால் பாடசாலைகளுக்கு ஏற்படும் சேதம் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
Link : https://namathulk.com