வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ் இடையிலான கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்த முறைமை தவறானது என்றும் அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆளுநர் எடுத்துரைத்தார்.
அத்துடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு கோருகின்றனர் எனவும், பாதுகாப்பு தரப்பினரின் காணிகளை கோரவில்லை எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது, இவ்விடயம் தெற்கில் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன், பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி, பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானதாக அமையுமென கனேடிய தூதுவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர், அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை தான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்பு செயலாளர் எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Link : https://namathulk.com