மன்னாரில், மக்களின் வாழ்வியலையும் எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கனிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும், கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
மன்னார் பொது அமைப்புக்கள் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது, இரண்டு தடவைகள் கனிய மணல் அகழ்வு குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்ட போதிலும், மக்கள் எதிர்ப்பினால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக வி.எஸ்.சிவகரன் கூறினார்.
அத்துடன், நாளை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 23 திணைக்களங்களும் களவிஜயம் மேற்கொள்ள வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறிய வி.எஸ்.சிவகரன், மக்களின் விருப்பம் இல்லாமல் களவிஜயம் மேற்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அந்த நிறுவனம் பின்வாங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
இதேவேளை , மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கை எனவும் வி.எஸ்.சிவகரன் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com