யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சுமார் 85 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த குழுவை சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இளைஞன் ஒருவரை கடந்த 08 ஆம் திகதி வேனில் ஏற்றிச் சென்ற குழுவினர், அவரின் வங்கிக் கணக்கிலிருந்த 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை பெண்ணொருவரின் கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
பின்னர் குறித்த இளைஞனை யாழ்ப்பாணம் ஆரியக்குளம் சந்தியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 04 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Link: https://namathulk.com