நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர்களை மையமாகக் கொண்ட அனர்த்தங்களை குறைக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சிறுவர்களை மையமாக கொண்டு சிறுவர்களுக்காக மற்றும் சிறுவர்களின் தலையீட்டின் மூலம் தேவைப்பாடுகளை இனங்கண்டு அவர்களினால் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் ஊடாக அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யும் முறையியலை சமூகமயப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் .
ஆனாலும் இந்த நோக்கம் உரிய இலக்கை நோக்கி பயணிக்கிறதா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம், வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.
வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் நேற்று உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த சிறுவன் முற்பட்ட போது மின்சார தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக நாட்டில் பல்வேறுப்பட்ட சட்டங்கள், அமைப்புக்கள் காணப்படுகின்ற போதிலும், சிலரின் அசமந்த போக்கினால் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவது வழமையான ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
Link : https://namathulk.com