பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவதில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பான அறிக்கை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதன்படி, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டு காட்டியுள்ளார்.
அத்துடன், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் மீதமுள்ள சவால்களை எதிர்கொள்ள முற்படும் அதேவேளையில். இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் பல்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையையும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கொழும்பிலிருந்து அதிக விருப்பு வாக்குகளை பெற்ற மூன்றாவது பெண் பிரதமரின் நியமனத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஆடையுற்பத்தி, தோட்டங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய முக்கிய துறைகளில் பெண்களின் பங்களிப்பை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு, நிதி உதவி, சமூக நல வசதிகள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் முறையான மற்றும் முறைசாரா துறைகளில் தற்போதுள்ள சவால்களைத் தணிக்கவும், பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் வலியுத்தினார்.
Link : https://namathulk.com