உள்ளூராட்சிமன்ற தேர்தலை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய , உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நேற்று மாலை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட உடனேயே , பாராளுமன்ற மரபுகளுக்கு அமைய சபாநாயகர் அதில் கைச்சாத்திட்டுள்ளார்.
இனி தேர்தலுக்கான நடவடிக்கைகளை உரிய செயன்முறைகளை பின்பற்றி நடாத்த வேண்டியதுதான்.
இந்த பின்புலத்தில் , கடந்த பாராளுமன்ற தேர்தலில் பணிபுரிந்த அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு இதுவரை முழுமையாக செலுத்தப்படவில்லை.
சில பகுதிகளில் கட்டம் கட்டமாக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை கொடுப்பனவு கிடைக்கவில்லை என தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் அங்கலாய்க்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை நமது TV செய்திப் பிரிவினர் தொடர்பு கொண்டு கேட்டபோது …
உள்ளக கணக்கு பிரிவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பாராளுமன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
எனினும், இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் நிலவிய ஊழல் மோசடி தொடர்பில் பகிரப்படும் விடயங்கள் தொடர்பிலும் நாம் வினவினோம்,
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Link : https://namathulk.com