வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் இல்லாத நிலையில் ஆகக்குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கான வசதிகளை செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை அடிப்படையில் தனியார் பஸ் ஒன்றின் ஊடாக பாடசாலைகளுக்கு சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது கிளிநொச்சி, பளை பகுதியில் நேற்று கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதற்கு கண்டணம் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர், ஆ.தீபன் திலீசன் கண்டண அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடையோரின் வன்முறை செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் சிலருடன் இணைந்து போக்குவரத்து பொலீசாரால் குறித்த வாகனம் பரந்தனில் வழிமறிக்கப்பட்டு, வாகன சாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொலிசாரின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு அருகிலிருந்த ஒரு சிலரின் தூண்டுதலே காரணமென பஸ்சில் பயணித்த ஆசிரியர்கள் கூறியதாக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொலிசாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்களின் பஸ் மீதான தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உடனடியாக பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு, குறித்த சம்பவத்தோடு தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com