கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பேசுப்பொருளாக இருந்த விடயம் ஆசிரியர் இடமாற்றம் ஆகும்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் கல்வி பின்னடைவுக்கு முறையற்ற ஆசிரியர் இடமாற்றமே முக்கியமான காரணமாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், யாழ் மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகள் உள்ளடங்களாக பல முன்னணி பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் கேள்விக்குறியானதாகவே இருந்து வருகிறது.
இந்த விடயம் குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தேசிய இணைப்பாளரும், பிரதி அமைச்சருமான சுந்தரலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண ஆளுநரிடம் அண்மையில் தெளிவுப்படுத்தியிருந்தார்.
ஆசிரியர் இடமாற்றம் என்பது வடக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலுமே பிரச்சினைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.
அந்தவகையில், ஆசிரியர் இடமாற்றங்கள் உத்தியோகபூர்வ ஆசிரியர் இடமாற்ற சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும், அதில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரஸ்தாபித்திருந்தார்.
அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப, மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை தற்காலிகமாக இணைப்புச்செய்யுமாறு வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்தில் பாடங்களுக்கு ஏற்பவும், நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்பவும் அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பாடங்களுக்குமான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.
Link : https://namathulk.com