நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதன் அடிப்படையில் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகாலை முதல் கடவுச் சீட்டு அலுவலகத்தின் வாசலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நாட்கள் நகர்ந்தோட திணைக்களத்திற்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டது.
இந்த நெருக்கடிக்கான தீர்வை வழங்க கடந்த அரசாங்க காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அது பயனற்று போனது எனலாம்.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச்சீட்டு விநியோகத்தை 24 மணித்தியால சேவையாக்குவது தொடர்பில் பேசப்பட்டது.
அத்துடன் கடவுச் சீட்டு அலுவலங்களை நாடளாவிய ரீதியில் ஸ்தாபிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது
அதன் முதல் கட்டமாக, கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் 24 மணித்தியால சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளாந்தம் 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயனாளர்களின் போக்குவரத்து தேவையை கருத்திற்கொண்டு கொழும்பு கோட்டையிலிருந்து , பத்தரமுல்ல வரை 24 மணித்தியாலங்களும் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திணைக்கள ஊழியர்கள் வாரத்தின் 05 நாட்கள் கட்டமைக்கப்பட்ட நேர அடிப்படையில் 24 மணித்தியாலங்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com