பொதுவாக பின்தங்கிய கிராமங்களில் வசிப்போரும் , வசதி குறைந்த நிலையில் வாழ்பவர்களுமே இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை நம்பி வாழ்கின்றனர்.
தினமும் போக்குவரத்து தேவை காணப்படும் மாணவர்கள், மற்றும் தொழிலுக்கு சொல்வோர் தமது போக்குவரத்து செலவை குறைத்துக் கொள்ளும் வகையில் மாதாந்த பருவக்கால சீட்டை பயன்படுத்துகின்றனர்.
எனினும், ஒரு சில பகுதிகளில் பருவகால சீட்டை வைத்துருப்போருக்கான சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
நாடாளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளன.
ஆனாலும் பருவகால சீட்டை குறித்தொதுக்கப்பட்ட வழித்தட பஸ்களில் மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு தவறும் பட்சத்தில் கட்டணம் செலுத்தி பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
இந்த பின்புலத்தில் இலங்கை போக்குவரத்து சபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பருவகால சீட்டை வைத்திருக்கின்ற பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பருவகால சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாக கருதப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பருவகால சீட்டை வைத்திருக்கின்ற பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் போது, 1958 என்ற இலக்கத்திற்கு அழைத்து இலங்கை போக்குவரத்து சபையின் தகவல் மையத்திற்கு அறியத்தருமாறு இலங்கை போக்குவரத்து சபை அறிவுறுத்தியுள்ளது.
Link : https://namathulk.com