இயற்கை அனர்த்தம் தாங்குதிறன் கொண்டதாக தீவுப்பகுதிகளின் தரைத்தோற்ற அமைவது கிடையாது. இதற்கு மன்னாரும் விதிவிலக்கல்ல.
மன்னார் தீவினை பொருத்தவரையில், கனிய மணல் அகழ்வு, அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஆகிய இரு விடயங்கள் பாரிய பேசுப்பொருளாக காணப்படுகின்றன.
அதானி நிறுவனம் தமது திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ள நிலையில், கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள் இன்றைய தினம் களவிஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மக்களின் வாழ்வியலையும் எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கனிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும், கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, மன்னாரில் கனியமணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் நடாத்த திட்டமிட்ட சட்டத்தரணி, அருட்தந்தையர் உள்ளடங்களாக 10 பேருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் தடையுத்தரவினை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும், மக்களின் விருப்பமின்றி கனியமணல் அகழ்வதற்காக, மன்னாரில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள களஆய்வினை உடனடியாக நிறுத்தவேண்டுமென பாராளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது, மக்களின் விருப்பமின்றி குறித்த களஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் ஏற்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
மன்னார் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராட்டம் மேற்கொள்ளலாம் எனவும் பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்த கூடாது எனவும் மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Link : https://namathulk.com