மன்னார், கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக, மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போன்றோர் மன்னாரில், கனிய மணல் அகழ்வினை நிறுத்துமாறும், களவிஜயத்தை மேற்கொண்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால், கனியமணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் நடாத்த திட்டமிட்ட சட்டத்தரணி, அருட்தந்தையர் உள்ளடங்களாக 10 பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மன்னார், கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக கள விஜயத்தை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த பகுதிக்கு கள விஜயத்தை அதிகாரிகள் மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
இந்நிலையில், இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்த கனிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் நிறுத்தப்பட்டு, வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதன்போது, பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளர் உள்ளடங்களாக கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com