புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் கடந்த காலங்களைவிட வித்தியாசமானதாக இருக்கும் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்த ஒன்றாகும்.
அந்தவகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இலங்கையில் வாழுகின்ற அனைத்து தரப்பினரையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் யாழ். பொது நூலகத்தினை அபிவிருத்தி செய்ய, 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தென்னாசியாவில் சிறந்த நூலகமான யாழ். பொது நூலகத்தினை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு இந்த நிதியினை பயன்படுத்துவதன் மூலம் இன்னுமொரு பரிமாணத்தினை வழங்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அத்துடன், இதனை வலியுறுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதவுள்ளதாகவும் இதன்போது, ஊடகச்செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கூறினார்.
Link : https://namathulk.com