இலங்கையின் கடன் மறுசீரமைப்பு என்பது நாட்டின் பொருளாதார சிரமங்களை குறைக்கும் மற்றும் கடன் பலவீனங்களை சரி செய்யும் ஒரு முக்கிய அம்சமாகும்.
உலகளாவிய பொருளாதார பாதிப்புகள், கொரோனா பெருந்தொற்று மற்றும் அரசியல் சிக்கல்கள் போன்ற காரணங்களால் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தது.
இதனால், இறுதி முடிவாக கடன் மறுசீரமைப்பு என்ற வழியை கையாளவேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தவகையில், கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகை காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பி செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2025 வரவு செலவுத்திட்டத்திற்க பின்னரான கருத்தாடல் கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதன்போது, வங்குரோத்தடைந்த ஒர நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல உலக நாடுகளுக்கு ஒரு தசாப்தம் வரை சென்றாலும், இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கு குறைவான காலமே செல்லும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி, முன்னுரிமை அடிப்படையில் நிதியை செலவிடுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரத்தை விஸ்தரித்து அதனை கிராம மட்டங்களுக்கு கொண்டு செல்லுவதன் மூலம், பொதுமக்களை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதேவேளை, பொருளாதாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட குழுக்களை மீண்டும் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதன் மூலம், கிராம மட்டத்திலான சிறிய பொருளாதார அலகுகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அத்துடன், கைத்தொழிற்துறைக்கு உதவுவதே, அரசாங்கத்தின் நோக்கம் என கூறிய ஜனாதிபதி, உற்பத்தி செலவுகளை குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் எனவும் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com