உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கான நகர்வுகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் திருத்த சட்ட மூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதில் சபாநாயகரும் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்நிலையில் , உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கையின்படி, 27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 274 பிரதேச சபைகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுமாறு எதிர்கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com