‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலைக்கான கையொப்பத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையதினமே கைச்சாத்திட்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்துள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் கூடியபோதே இந்தத் தகவல்கள் யாவும் வெளிப்பட்டன.
செலவீனங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பணிப்பாளர் சபை அனுமதியை வழங்கியிராத சந்தர்ப்பத்திலேயே இந்தக் காசோலையில் முன்னாள் தலைவர் கையொப்பமிட்டிருந்ததாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாளே இவ்வாறு கைச்சாத்திட்டிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்து.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு, முன்னாள் தலைவரின் அழுத்தத்திற்கு அமைய செலவுகளுக்கான ஒப்புதலை வழங்கி கைசோலையைக் கையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் தலைவர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அவ்வாறு செயற்பட்டதாகவும், தாம் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் இடமாற்றங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
இதற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் 188 மில்லியன் ரூபாவுக்கான காசோாலையை வெளியிடவேண்டி ஏற்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இதன்போது, இது மிகவும் உணர்திறன் மிக்க விடயம் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நிசாந்த சமரவீர தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்க அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நிசாந்த சமரவீர சுட்டிக்காட்டினார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களின் போது அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான ஆளுமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய தலைவர்இ தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரிகள் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் நிதிப் பணிப்பாளர் குழுவிற்கு வருகை தந்திருந்தபோதும்இ குழுக் கூட்டம் முடிவடையும் வரை அவர் எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருப்பதற்கு முயற்சித்தமை தொடர்பிலும் கோப் குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கும்போது அமைதியாக இருக்க முயற்சிப்பது குழுவைப் பிழையாக வழிநடத்துவதாக அமைவதுடன், இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரைக் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது பற்றி மேலும் கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் (20) கோப் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
Link : https://namathulk.com