அரசாங்கத்தின் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தை பாடசாலை மட்டங்களுக்கு கொண்டு சென்று செயற்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக சாரணர் சங்கத்தின் ஸ்தாபகர் ரொபர்ட் பேடன் பவுல் பிரபுவின் 68 வது பிறந்த தினமான இன்று, நாடளாவிய ரீதியில் இலங்கை சாரணர் சங்கத்தினால் க்ளின் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, யாழ் மாவட்ட சாரணர் சங்கத்தின் பங்களிப்பில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லி, யாழ் ரயில்நிலைய பிரதம அதிபர் சுரேந்திரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருணன், சேவ் த லைப் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ராகுலன் மற்றும் சாரணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கிளிநொச்சி ரயில் நிலையத்திலும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் தலைமையில் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்து.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, மூன்று பிரதான ரயில் நிலையங்கள் இன்று தூய்மைப்படுத்தப்பட்டன.
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம், இலங்கை ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, திருகோணமலை, சீனக்குடா மற்றும் தம்பலகாமம் ஆகிய ரயில் நிலையங்கள் பாரிய சிரமதானத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தில, 325 சாரணர்கள், 45 பெற்றோர்கள், 20 பாடசாலை அதிபர்கள், சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
அதேபோல, மட்டகளப்பு மாவட்டத்திலும் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று சாரணிய சங்கம் இணைந்து, மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஸ்ட பிரதி ஆணையாளரும், மட்டக்களப்பு மாவட்ட பதில் ஆணையாளருமான அமிதன் கார்மேகம் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com