முழு நாட்டையும் உலுக்கிய கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ சம்பவம் மற்றும் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகம் என்பன நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் தற்பொழுது அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களுக்கெதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இதன்போது, நாட்டில் தற்போது திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 58 குழுக்களும், அதனோடு தொடர்புடைய 1,400 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முப்படைகளுடன் தொடர்புடைய சில நபர்கள் இந்த குற்றவாளிகளுக்கு உதவியுள்ளதாகவும், சமீபத்திய சம்பவங்களோடு தொடர்புடைய 09 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கூரான ஆயுதங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட ஐந்து கொலைகளும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை அடையாளம் காண்பதில், பொதுமக்கள் பொலிசாருக்க உதவ முன்வர வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com