இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியதும், ஏனையவை அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கருத்தில் கொள்ளும்போது ஒருவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகின்றது.
இந்நிலையில், அந்த தொகை சிறுவர்களை பராமரிப்பதற்கு போதுமானதா என்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது.
இந்நிலையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.
அத்துடன்,நன்னடைத்தை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்களில் சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகவும், அந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதற்கிணங்க, சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான நடைமுறையொன்று தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.




















Link: https://namathulk.com