இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு ஜனாதிபதியால் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம், அந்நிதியினை பயன்படுத்தி நூலகத்தை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலமாக, இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் இலகுவாக இந்த நூலகத்தை பயன்படுத்தும் நிலையை உருவாக்க முடியும் என்பதுடன், ஆவணங்களைப் பாதுகாத்து, பராமரிப்பதற்கும், இடவசதியினைப் பேணுவதற்கும் வசதியாக இருக்கும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கிளிநொச்சியில் அமைந்துள்ள நூலகத்திற்கு சொந்தமான காணி இராணுவத்தின் வசம் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் குறித்த காணியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டு, கரைச்சி பிரதேச சபையினால் கட்டிடம் கட்டப்பட்ட போதிலும், குறித்த கட்டிடம் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும் செயலாளர் நாயகம் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த கட்டிடத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நூலகத்தினை மக்கள் பாவனைக்கு கையளிப்பதுடன், நூலகத்திற்கான எஞ்சிய காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Link : https://namathulk.com