தற்போதைய அரசாங்கம் பல்வேறு துறைகளிலும் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்து வருகின்றது. இதனில் கல்வித்துறையும் ஒன்றாகும்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், கல்விக்கென்று பாரிய நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, அரசாங்கத்தினால் கல்வி சார்ந்து செயற்படுத்தப்படுகின்ற சீர்த்திருத்தங்கள் அனைத்தும் சமூகத்தின் சகல தரப்பினருக்கும் சம விகிதத்தில் பிரித்து வழங்கப்பட் வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்தவகையில், விசேட தேவையுடையோர் சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக விசேட தேவையுடையோர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் சார்ந்த குழுவினருடனான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை விசேட தேவையுடையோர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் சார்ந்த குழுவினர் முன்வைத்தனர்.
இதில், விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கான உயர்கல்வி நிலைகளை அறிமுகம் செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மதியிருக்கம் (ஒட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை உயர்த்தவும், அநாதை பிள்ளைகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் குழுவினர் பாராட்டினர்.
விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் க்ளீன் சிறிலங்கா திட்டத்தினூடாக அதனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை என கூறிய பிரதமர், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது இங்கு மிகவும் முக்கிய விடயம் எனவும், அதுதான் 2025 வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார்.




Link: https://namathulk.com