இலங்கை பொருத்த வரையில், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்களும், அவர்கள் மீதான அத்துமீறிய செயற்பாடுகளும் காலம் காலமாக நடைபெற்று கொண்டே உள்ளது.
இந்நிலையில், தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த போலி செய்திகளுக்கமைவாக, யாழ்ப்பாண ஊடகவியலாளர்களான, பிரதீபன், பரதன் ஆகியோரிடம் பலாலி பொலிசார் 6 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணைக்கு அப்பால் மேற்படி ஊடகவியலாளர்களின் தொலைபேசியை பரிசோதித்தமை, அவர்களின் பிரத்தியேக செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாட்டை கண்டித்து, அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டன அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடிப்பணிந்து வைத்திருக்க செய்யும் மற்றொரு வேலையாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வடக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அப்பகுதியிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சம்மதமே இல்லாத பிரச்சினைகளில் அவர்களை தொடர்புப்படுத்துவது, ஏற்புடையதல்ல எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்படி இரண்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டு வர அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, குறிப்பிட்ட இரு ஊடகவியலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com