நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு போலவே கடவுச் சீட்டையும் பெற்றுக் கொள்ள மிக நீண்ட வரிசை நிலை உருவாகியது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்கு காரணமாகியது.
இந்நிலையில் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதிலும் மோசடிகள் இடம்பெற்றமை அம்பலமாகியது.
நீண்ட வரிசை முறையை இல்லாது செய்ய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதியாக 24 மணித்தியால சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் ஒருநாள் சேவை ஊடக கடவுச் சீட்டுகளை பெறுவோருக்கு மாத்திரமே 24 மணித்தியால சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சாதாரண சேவையில் ஒன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மந்த கதியில் நகர்த்தப்படுகின்றன.
இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கான கடவுச் சீட்டுக்களை ஒரு மாதத்திற்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதனூடாக குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தேவையான அச்சு இயந்திரங்கள் கொள்வனவு செய்த பின்னர் யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் கடவுச் சீட்டுக்களின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com