இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஆட்சேபித்து அவரின் சட்டத்தரணிகளால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவுப்பெற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த கொழும்பு மேல்நீதிமன்றம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது .
கொழும்பு கிருலப்பனை பகுதியில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறினார்.
இன நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் இவரின் கருத்து அமைந்திருந்தமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
Link : https://namathulk.com