இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை என்பது இன்றளவும் தீர்வுக் காண முடியாத பிரச்சினையாக உள்ளது.
அத்துடன், எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமையும், அவர்களின் இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றது.
அத்துடன், இந்திய மீனவர்களுக்காக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை கருத்திற் கொண்டு, இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டிற்காக 18 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 131 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், சிறையுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்றிலிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மீனவர்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை மத்திய அரசு பெற்றுக்கொடுக்கும் வரையில் இந்த போராட்டம் இரவு, பகலாக தொடரும் என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இன்று (1) மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி , மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு ஆதரவு வழங்கவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Link : https://namathulk.com