பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – ஜனாதிபதி
தமிழ் மக்களிடையே அதிகளவில் பேசப்படும் விடயங்களில் பயங்கரவாத தடைச் சட்டமும் ஒன்றாகும்.
தமிழ் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என மிக நீண்டகாலமாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தமது தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்தனர்.
இந்த பின்புலத்தில், நேற்றைய தினம் பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாது செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த விடயம் இன்றைய நாளுக்கான பேசுபொருளாக மாறியுள்ளது.
சட்டப்பூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் அவ்வாறனதொரு செயற்பாட்டினை அனுமதிக்காது எனவும் வலியுறுத்தினார்.
மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாது எனவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கை இராணுவத்தையம் பொலிசையும் தொழில்சார்புடையதாக மாற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
Link : https://namathulk.com