இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
இடதுசாரி கொள்கையுடன், 1949 முதல் 2025 வரையான அவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் தனக்கென்று ஒரு இடத்தை வகுத்து துணிச்சலுடன் செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் கடந்த ஜனவரி 19 ஆம் திகதியன்று காலமானார்.
இந்நிலையில் ஊடகத்துறையினர் மட்டுமல்லாது அரசியல் மற்றும் பொது அமைப்புகள் என பலரும் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
அதனடிப்படையில் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக அமையத்தில் அமரரது உருவப்படத்துக்கு சுடரேற்றி மாலை அணிவித்து நினைவுகூரல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் செல்வக்குமார், புலனாய்வு செய்திக்கென தத்துரூபமான பொறிமுறையை வகுத்து செய்தியிடலை முன்னெடுத்து வந்த விக்டர் ஐவன் வடக்கின் தகவல்களையும் அச்சமின்றி துல்லியமாக அறிக்கையிட்டவர் என குறிப்பிட்டார்.
மேலும், வடக்கின் தமிழ் ஊடகப் பரப்பில் அனைத்து ஊடகங்களும் புலனாய்வு அறிக்கையிடலையே முன்னெடுத்து வருவதாகவும், தமிழர் தேசத்தில் நடத்தப்பட்ட சம்பவங்களையும் துயரங்களையும் அச்சமின்றி வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு உந்துதலாகவும் விக்டர் ஐவன் இருந்தார் எனவும் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com