ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட உரையில் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் , ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் அதிகாரிகள், முன்னுரிமை ஆவணத்தை அடிப்படியாகக் கொண்டு வேலைத் திட்டங்களை திட்டமிடல் மற்றும் செயற்படுத்துதல் தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிதியாண்டில் இந்த ஒதுக்கீடுகளை அதிக வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நகர அபிவிருத்தித் திட்டங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்வது, பொதுமக்களுக்கு நலனை ஏற்படுத்தும் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்துதல் என்பவற்றை உறுதிப்படுத்த முறையான கட்டமைப்பு இல்லாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கும் போது நகர அபிவிருத்தித் அதிகாரசபை, உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் ஏனைய அனைத்து அரச நிறுவங்களினதும் கருத்துக்களை, முன்மொழிவுகளை பெறவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதற்கமைய தயாரிக்கப்படும் திட்டங்களை செயற்படுத்தும் போது அந்த பொறுப்புகளை கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் அனுமதி வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த காலங்களில் அவ்வாறான ஒருங்கிணைப்பு இடம்பெறவில்லை என்பது புலப்படுவதாகவும், அது திட்டங்களை செயற்படுத்துவதில் தாமதம் மற்றும் வினைத்திறனின்மைக்கு காரணமாக அமைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் ஊடாக நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கான முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை கருத்திற்கொள்ளுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.













Link: https://namathulk.com