ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28, 186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை இந்த கலந்துரையாடலின் ஊடாக புலப்பட்டுள்ளது.
அத்துடன், 22,410 ரூபாய் கட்டணம் அறவிட்டு 28 நாட்கள் வதிவிடப் பயிற்சி வழங்கியிருக்க வேண்டி இருந்தாலும், இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தப் பயிற்சிக்குப் பதிலாக மூன்று மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 390 பேருக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த கோப் குழு, இந்த நேர்முகப்பரீட்சையும் வீடியோ ஒன்றைப் பார்ப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனால், 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இக்கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு 170,000 ரூபாய்க்கு 30 வர்த்தகக் கூடங்கள் வாடகைக்கு எடுத்துள்ளதுடன், அதே நிறுவனத்தின் மூலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு எடுத்த வர்த்தக கூடம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமையும் குறித்த தொகைக்கு, 25 வர்த்தகக் கூடங்கள் எடுத்துள்ளமையும் கண்டறியப்பட்டதுடன், அமைச்சின் செயலாளரிடமிருந்த கிடைத்த பரிந்துரைக்கு அமைய இந்தக் கட்டணம் செலுத்தப்பட்டதாக வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், ஜயகமு ஸ்ரீலங்கா திட்டத்துக்கான மொத்த செலவு 1.2 பில்லியன் என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், இதற்காக நிதி சரியான முறையில் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த செலவு 500 மில்லியன் ரூபாவுக்கு அதிகம் என்பதால், அதற்காக அமைச்சரவையின் அனுமதி தேவை எனவும், அந்த அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுவதானால் இது தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், சுற்றுலா வீசாவில் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பதிவுசெய்யப்பட்ட முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்நததுடன், இது நிறுவனத்தின் பொறுப்பை முற்றாகத் தட்டிக்கழிப்பதாகும் என கோப் குழு குற்றம்சாட்டியது.
மேலும், 2023 மார்ச் 30 இல. 07/2023 கொண்ட தலைவரின் சுற்றுநிருபத்தின் ஊடாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமான் நாட்டுக்கு சுற்றுலா ஒப்பந்தம் இன்றி இந்த வீட்டுப் பணிப்பெண்கள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்இ அவர்களது பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி அதிகாரிகளிடம் கோப் குழு வினவியது.
இவ்வாறு சுற்றுலா வீசாவில் 4,942 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், அவற்றில் அதிகமானவர்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளமை சம்பந்தமான ஆவணங்கள் தூதரகத்தின் கணினி தகவல் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என்பதும் இந்த கலந்துரையாடலின் ஊடாக வெளிப்பிட்டுள்ளது.
அத்துடன், வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாக தடுத்து வைப்பதற்கான தடுப்பு மையங்களைப் பராமரிப்பது குறித்தும், இந்நிறுவனத்தில் நியமனங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதனை அடிப்படையாக கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பற்றிய விசாரணைகளுக்காக கோப் உப குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.






Link: https://namathulk.com